*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என் மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

போர்களின் துவம்சம்
முடியவில்லை
மண்புயலில் அமிழும்
கைக்குழந்தைகளோடு.

வேகத் தெருக்களில்
கையசைக்கும் சாத்தானை
வறுமையை
காற்றை
மழையை
எதிர்ப்படும் கடவுளை
அறியப் பிரியப்படவில்லை.

மனம் மரத்தாயிற்று
எப்போதோ.

அழுகுரல்களும்
இரத்தப் பிசுபிசுப்பும்
இன்னும் பிற ஞாபகமூட்டும்
வாசனைகளும் நாற்றங்களும்
நாசியோடு நின்றாயிற்று.

நாட்குறிப்புகளின்
விளிம்புகளிலும்
எச்சங்களின் சேடம்.

ஒரு வேளை
போரினால் இறந்த
குழந்தையொன்றறியலாம்
பாவமும் தர்மமும்
அதன் கொள்கையும்
மதம் சாரா
புதுக் கடவுளின் வருகையையும்.

போர்களும்
மதவெறித் துவேசங்களும்
கொன்றுவிட்டே செல்கின்றன
குழந்தைகளை.

எதற்கும் அசைவதில்லை
இப்போதெல்லாம் நான்
சத்தமிட்டுக் கூக்குரலிடுகிறது
தெருமுனை விலங்கொன்று!!!

 குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, December 14, 2014

*லாம்* களின் இருக்கை...

இருந்திருக்கலாம்
செய்திருக்கலாம்
கிடைத்திருக்கலாம்
சொல்லியிருக்கலாம்....

'லாம்....லாம்...'

படிமங்களில் நிலையழிந்த
இலையொன்று
தரைதட்டும் தரவாகிறது
சில 'லாம்' ங்கள்.

நெளியும் மண்ணுளியாய்
முன்னெப்போதோ
சேமித்த தர்மம்
கொடுப்பினைகள்
தொட்டு நீளும் கைகளில்
திசையறியாமல்.

மந்தார மரங்களுக்கும்
அலுவல்.

நிலையழிந்து
நிலம் தொடும் உடலுக்கு
உலுக்கித் தர ஏதுமில்லை.

மந்தணச் சொற்களையும்
மந்தாரப் புன்னகையையும் 
சேமிக்கிறது
தியானத்தின் பெருவெளி.

நீண்டு நழுவி
நடந்துகொண்டிருக்கின்றன
சில கொடுப்பினைகள்.

முழம் தள்ளித்
தனித்துறங்கும் குழந்தைமீது
முலைவெடித்துச் சீறும் பாலென.

கானல்நீர்க் குவளை
கொடுப்பினையாவது
கிடைத்துவிட்டுப் போகட்டும்
பட்ட மரத்தடியில்
நினைவுக் கனியுண்ணும்
பறவைக்கு.

அலட்சியமாய்
நிராகரித்துவிடாதீர்கள்
சில அங்கீகாரங்களை
மறந்தும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 11, 2014

இறுக்கிய அனத்தம்...

மனம் சலிக்கிறது
கை விடப்பட்ட நாடோடியின்
கனவுப் பாடல்போல் தனித்து.

பேசித் திட்டி
உக்கிரச் சண்டையின் பின்
வார்த்தைகள்
நிறம் வழிந்து வேலியோரமிறந்த
பட்டுப்பூச்சியின் சிகப்பாய்
வயிறு பருத்து.

குட்டிச் சாக்குகளுக்கும்
தன் தந்தைக்கும்
ஏதுமில்லா முலையை
சூப்பிச் சப்பும்
நாய்க்குட்டிகளுக்கும் நடுவில்
பின்னிரவில் காத்திருக்கும்
சிறுமியாய் சிலசமயம்.

கூடிழந்த பறவையொன்றின்
நகச்சிலிர்ப்பை உணர்வதில்லை
காடு தொலைத்தவர்கள்.

அகமும் புறமும் சலித்து
கழுமரப் பழங்கறை
நனைத்து நுழைய
ஏந்திக் கொள்கிறது
வார்த்தைக் கொலைவாள்.

எச்சரிக்கையற்ற சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 04, 2014

காற்றின் கால் தடம்...

நினைவோடு ஒட்டிக்கொள்கிறது
சவரம் செய்யாத
உன் முகம்
தலைதடவி
விரல் கோர்க்க
பேசிக்கொண்டே தூங்கிவிடுகிறாய்
பரஸ்பர பார்வையை
என் பக்கம் துளைத்தபடி.

நிராகரிப்பில்லாத
உன் புன்னகை வளைப்பில்
இழுபடும் என் இதயம்
வியர்வை வாசத்தில்
அமர்ந்துகொள்கிறது.

பேசும்போது
அடிக்கடி நீ
சொல்லிக்கொள்ளும்
'குட்டிம்மா'
ஆழ்மன நெரிசலில்
அமுங்கினாலும்
அழியாமல்
பதிகிறது
உன் விம்பத்தோடு.

கணங்களை
இன்றாக்கி
இனியாக்கி
இரவாக்கி
பின்
நாளையாக்கிச் சுருக்க
எதிலும் நீயென
உருகி உடைகிறேன்
நொடிக் கம்பிகளுக்கிடையில்.

கொத்து ரோஜாக்கொடியில்
சிறுகணம் தங்கும் தேனியென
இல்லாமல்
இறுக்கி அணைத்துக்கொள்ளேன்
உன் எழுத்துக்களைப்போல்
ஒரு சிறு கணத்தில்
அதுவாகிக்கொள்ள!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 02, 2014

சங்கமம்...

பிரளய அலறலை அடக்கி
உயர்த்தி
வாசித்துக்கொண்டிருக்கிறது
அடைமழை.

முழுதாய்ச் சங்கமித்து...

பறை கொட்டி
ஆண்டாளாய்க் கண்ணனை
உள்ளூர நிரப்ப....

கனவோடு
இதழால் இதழுறிஞ்சி
மணிச்சிகைக் கொடியாய்
துவள...

கொதித்து வியர்த்து
தவிக்கும் உடலுக்கு
மயிற்பீலி வருடி...

அங்கங்கே
சிறு சிறு துளி தூவி
அந்தரக் கனவுறை போர்த்தி
சறுக்கிக் கடக்கும்
ஈர ராப்பூச்சி
பெருமலைக் காட்டில்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2014

எனதிந்தப் பனியிரவு...

ஒரு மெல்லிசைப் பாடலிலோ
தாழப்பறக்கும் ஈசலின் இறகிலோ
வலசைப் பறவைகளின் ஒலியிலோ
கூட்டலையும் கழித்தலையும் சிலாகிக்கும்
என் நிலாவிடமோ
பனியடக்கி வேர்த்திருக்கும்
சுவர்க் கண்ணாடிகளிலோ
ஒரு கோப்பை பச்சிலைத் தேநீரிலோ
அடங்கா அர்த்தங்களுடன்
ழுழுவதுமாய் வியாபித்திருக்கிறது
எனதான இவ்விரவு.

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

பிணங்களுக்கான முகங்கள் அவசியமற்றது
ஆனாலும் மனிதனுக்கு அவசியமானது
உறங்கப்போகும் எனக்கும்கூட.

எத்தனை தரம் தப்பித்திருப்பேன்
இந்த இரவிடம்.

நான் இங்கே இப்போ
தெளிவாயிருந்தாலும்
இப்பனியிரவு
பயங்கரமாயிருக்கிறது.

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)